search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு அலுவலகம்"

    • சுமார் 55 நாடுகளில் இருந்து நூறு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
    • ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதற்காக, சிறப்பான ஏற்பாடுகளை கோவிலின் அறக்கட்டளை செய்து வருகிறது. திறப்பு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    உள்நாட்டில் மட்டுமல்ல சுமார் 55 நாடுகளில் இருந்து நூறு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர். 

    சில மாநிலங்களில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ம் தேதி அன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 22ம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

    ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஏதுவாக அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருப்பதால் தணிக்கை முடிந்த பிறகு நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதாக கூறினார்.
    • விரத்தியடைந்த சோபித்குமார் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு நகரை சேர்ந்தவர் சோபித் குமார்( 62). இவர் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழியராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். இவர் பணியாற்றிய காலத்தில் வரவு செலவில் சில முரண்பாடுகள் இருந்ததால் ஆடிட் செய்வதற்காக இவரது சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனால் விவசாய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மேலாண் இயக்குனர் அய்யப்பனை அடிக்கடி சந்தித்து ஓய்வூதிய பலன்கள் வழங்குமாறு கேட்டு வந்தார். வழக்கம் போல் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள கான்பெட் அலுவலகத்தில் இயக்குனர் அய்யப்பனை சந்தித்து முறையிட்டார்.

    அப்போது அவர் வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருப்பதால் தணிக்கை முடிந்த பிறகு நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதாக கூறினார். தற்காலிகமாக ரூ.10 ஆயிரம் வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    இதனால் விரத்தியடைந்த சோபித்குமார் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார். உடலில் பற்றிய தீயுடன் அங்குமிங்கும் ஓடி கார் பார்க்கிங் அருகே மயங்கி விந்தார். இதனை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஜிப்மரில் அனுமதித்தனர். சோபித் குமாருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தற்கொலைக்கு முயன்ற சோபித்குமாருக்கு மாலதி (59) என்ற மனைவியும், மகன் குழல்மாலன், ப்ரித்தி என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தீக்குளிக்கும் முன்பு மனைவியிடம் செல்போனில் பேசி தன்னை மன்னிக்குமாறு கூறியுள்ளார்.

    நேற்று முன்தினம் புதுவை காலாப்பட்டு போலீஸ்நிலையத்தில் கலைச் செல்வி என்ற பெண் தீக்குளித்து இறந்தார். அந்த சம்பவம் அடங்குவதற்குள் அரசு அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் தீக்குளித்த சம்பவம் புதுவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • பணம் மற்றும் தங்க கட்டிகளை அங்கு மறைத்து வைத்தது யார்? என தெரியவில்லை.
    • பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யோஜனா பவன் என்ற அரசு அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு அரசுதுறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு அலுவலக அறையில் பணம் மற்றும் தங்ககட்டிகள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது அங்கு அலமாரியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த பையினை திறந்து சோதனை மேற்கொண்டனர்.

    அதில் கட்டுக்கட்டாக 2 கோடியே 31 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 1 கிலோ தங்கக்கட்டிகள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர், அந்த பணம் மற்றும் தங்ககட்டிகளை பறி முதல் செய்தனர். அந்த பணம் மற்றும் தங்க கட்டிகளை அங்கு மறைத்து வைத்தது யார்? என தெரியவில்லை.

    அது லஞ்சப்பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தர விடப்பட்டு உள்ளது. அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக 7 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கிணறு தோண்ட லஞ்சம் கேட்டதால் விவசாயி ஆத்திரமடைந்தார்.
    • இதனால் அவர் ரூ.2 லட்சம் பணத்தை அரசு அலுவலகம் முன் வீசி எறிந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிணறு தோண்ட அனுமதி கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். இதற்கு அந்த அரசு அதிகாரி ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி 2 லட்சம் ரூபாய் பணத்தை மாலையாகக் கட்டி தனது கழுத்தில் அணிந்து கொண்டு அரசு அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து கோஷமிட்டபடி தன்னிடம் இருந்த பணத்தை அந்த அலுவலக வளாகத்தின் முன்பு அவர் வீசி எறிந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசுத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் சூரிய சக்தியை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • விடுமுறை மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    தமிழகத்தில், அரசுத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் சூரிய சக்தியைக்கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அரசு அலுவலகங்களில் பகல் நேரங்களில் தினசரி தேவைப்படும் மின்சாரத்தின் அளவிற்கு ஏற்ப திறன் கொண்ட 'பேனல்' அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரம் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.

    விடுமுறை நாட்கள் மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தை உடுமலை நகரில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்டமாக, மின்வாரிய அலுவலக மேற்கூரைகளில், பேனல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு கட்டடங்களிலும் சோலார் பேனல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது என்றனர்.

    • கலெக்டர் வினீத் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவ சேவை வழங்க அறிவுறுத்தினார்.
    • தாலுகா அலுவலகத்தில் துறை ரீதியான கோப்புகளை ஆய்வு செய்தார்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் பல்லடம் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனைஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பல்லடம் அருகே உள்ள கரடிவாவி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த கலெக்டர் வினீத் அங்குள்ள படுக்கை வசதிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், இருப்பு வைத்துள்ள மருந்துகளில் காலாவதியானவைகளை அகற்றவும், கரடிவாவி சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவ சேவை வழங்கவும் அறிவுறுத்தினார்.

    அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம், அய்யம்பாளையத்தில் உள்ள ரேசன் கடை ஆகியவற்றை பார்வையிட்டார். பல்லடம் தாலுகா அலுவலகத்தில் துறை ரீதியான கோப்புகளை ஆய்வு செய்தார். சர்வே பணிகளை தாமதம் இன்றி செய்து தரவும், நீதி மன்ற உத்தரவுகளை உரிய கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.மேலும் அங்குள்ள திருப்பூர் மாவட்டத்திற்குரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீசாரின் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறையை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் நந்தகோபால் உடன் இருந்தார்.

    அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி :

    நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டதை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. தற்போது தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதால் வருகிற 8-ந்தேதி முதல் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யுமுன் அனைத்து ஊழியர்களும் கையை சானிடைசர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இதற்காக பயோமெட்ரிக் கருவிக்கு அருகே சானிடைசர் பாட்டில்கள் இருக்க வேண்டும்.

    வருகை பதிவு செய்யும் ஊழியர்கள் 6 அடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். வருகை பதிவு செய்யும் நேரம் உள்பட அலுவலகத்தில் எந்நேரமும் ஊழியர்கள் முககவசம் அணிய வேண்டும். கூட்டத்தை தவிர்க்க தேவைப்பட்டால் கூடுதல் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பது போன்ற வழிகாட்டுதல்களை அரசு வழங்கியுள்ளது.

    மேலும் அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
    வெள்ளையர் ஆட்சிக்காலத்து மரபான தர்பார் மாற்றத்தின்படி காஷ்மீர் மாநிலத்தின் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் நாளை முதல் ஜம்முவில் இயங்கும். #DarbarMove #JKsecretariat
    ஸ்ரீநகர்:

    தமிழக அரசின் தலைமை செயலகம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதைப் போல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில தலைமை செயலகமும் அந்த மாநிலத்தின் தலைநகரில் இயங்கி வருகின்றன.

    ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் கோடை மற்றும் கடுங்குளிர் காலங்களில் தலைமை செயலகம் முறையே ஸ்ரீநகரிலும், ஜம்முவிலும் என இரு இடங்களில் இயங்கி வருகிறது.

    இப்படி தலைமைச் செயலகத்தை மாற்றும் இந்த மாற்றமானது, தர்பார் மாற்றம் என்றழைக்கப்படும் இந்த வழக்கம் காஷ்மீரை குலாப் சிங் என்ற மன்னர் ஆட்சி செய்த 1872 முதல் கடந்த 146 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தலைமை செயலகம் மட்டுமின்றி அம்மாநில கவர்னர் மாளிகையும் குளிர் மற்றும் கோடைக் காலங்களில் ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் இயங்கும்.

    குளிர்காலத்தில் ஸ்ரீநகரில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்பதால் அரசு ஊழியர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் மற்றும் முக்கிய கோப்புகளை ஜம்முவுக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.

    இதற்கு வசதியாக ஸ்ரீநகரில் இயங்கி வந்த மாநில தலைமை செயலகம் கடந்த மாதம் 26-ம் தேதி மூடப்பட்டது. ஸ்ரீநகரில் தங்கியிருந்த அரசுப் பணியாளர்களும் ஜம்முவுக்கு திரும்பத் தொடங்கினார்கள். 

    இந்நிலையில், நாளை முதல் அம்மாநிலத்தின் தலைமைச் செயலகம் ஜம்முவில் இயங்கத் தொடங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் இன்னும் 6 மாதத்திற்கு காஷ்மீரின் கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஜம்முவில் இயங்கும். #DarbarMove #JKsecretariat 
    சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அரசு அலுவலகம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். #Somaliaexplosion #Mogadishuexplosion
    மொகடிஷு:

    சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹாவ்லே வாடாக் மாவட்டத்தில் உள்ள அம்மாவட்ட தலைமை நிர்வாக அலுவலகத்தின் மீது இன்று வேகமாக வந்த ஒரு கார் மோதி வெடித்து சிதறியது.

    இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 6 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கார் குண்டு வெடித்து சிதறிய வேகத்தில் அருகாமையில் இருந்த ஒரு பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆனது. ஒரு மசூதியின் மேற்கூரை மற்றும் சில வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.  #Somaliaexplosion #Mogadishuexplosion
    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் 15-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந்தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் விரிப்புகள், உணவு பொருட் களை எடுத்து செல்ல பயன்படுத்தும் பிளாஸ் டிக் கைப்பைகள், தட்டுகள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை முற்றிலும் பயன்படுத்த கூடாது.

    எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து துறை அரசு அலுவலர்களும் கடைபிடிப்பதுடன் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அனைத்து அலுவலகங்களிலும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை, காகிதப்பை, பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
    ×